சிங்கப்பூரில் உயிரை மாய்த்துக் கொண்ட தமிழக ஊழியர் – மரணத்தில் எந்த சதிச்செயலும் இல்லை..!

Tamilnadu Worker died in Singapore
(Photo: A Panjali and ItsRainingRaincoats)

சிங்கப்பூரில், 46 வயதான அழகு பெரியகருப்பன் என்ற தமிழக ஊழியர், கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி, கூ டெக் புவாட் மருத்துவமனையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

அவர், மருத்துவமனை படிக்கட்டில் அசைவில்லாமல் இருந்ததாகவும், பின்னர் அவருக்கு ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்ததாகவும் அன்று தெரிவிக்கப்பட்டது.

அவரது மரணத்தில் எந்தவிதமான சதிச்செயலும் சந்தேகிக்கப்படவில்லை என்று விசாரணை அதிகாரி கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 24) நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையும் படிங்க : முஸ்தஃபா சென்டர் உள்ளிட்ட இடங்களுக்கு தொற்று பாதித்தவர்கள் சென்றுள்ளனர்..!

அழகு, ஒரு கோவிட் -19 நோயாளி என்பதை சுகாதார அமைச்சகம் பின்பு உறுதிப்படுத்தியது,

ஆனால் அவர் உயரத்திலிருந்து வீழ்ந்ததன் காரணமாக ஏற்பட்ட பலத்த காயங்களால் இறந்தார் என்றும் தெரிவித்தது.

அவர், செப்டம்பர் 2009 முதல் கட்டுமான ஊழியராக பணிபுரிந்து வந்ததாகவும், தங்கும் விடுதியாக மாற்றப்பட்ட தொழிற்சாலையில் வசித்து வந்ததாகவும் மனிதவள அமைச்சகம் (MOM) அச்சமயம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

குடும்பம்:

அழகுக்கு மதுரையை சேர்ந்த பாஞ்சாலி, என்பவருடன் கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6 முதல் 16 வயதுக்குட்பட்ட 3 மகள்கள் உள்ளனர். மேலும் தனது மனைவியின் பெற்றோரையும் ஆதரிக்க வேண்டிய சூழலில் அழகு இருந்துள்ளார், ஆக மொத்தம் 7 பேர் கொண்ட குடும்பத்துக்காக அழகு, சிங்கப்பூரில் பணியாற்றி வந்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி:

அழகு, தலைவலி மற்றும் காய்ச்சல் காரணமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். Swab என்னும் பரிசோதனையில் அவருக்கு COVID-19 தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அவரது உடல்நிலை கவலை கொள்ளும் வகையில் இல்லை என்றும், மிக விரைவில் குணமடைவார் என்றும் மருத்துவமனைத் தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி, அவரின் சடலம் மருத்துவமனையின் படிக்கட்டில் கண்டெடுக்கப்பட்டது.

மன உளைச்சல்:

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு தமது குடும்பத்தாரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிருப்பதாகவும், அதன் பின்னர் அவருக்குக் கடும் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் கருதப்படுவதாக BBC தெரிவித்துள்ளது.

இதில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில், அழகு தனது வார்டின் கழிப்பறையில் இரண்டு காணொளிகளை பதிவு செய்துள்ளார்.

ஒரு காணொளியில்: “எனக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள், எனவே நான் உயிருடன் இருக்க விரும்பவில்லை. நான் என் உயிரை இழக்க தயாராக இருக்கிறேன். யாருக்கும் அல்லது எதற்கும் இதில் எந்த சம்பந்தமும் இல்லை. இதை நான் சுய மனதுடன் பதிவு செய்துள்ளேன்” என்று கூறியுள்ளதாக சிங்கப்பூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதை அடுத்து, கழிவறையின் ஜன்னலைத் திறந்து அதன் வழியாக கீழே குதித்துள்ளார். இதனால் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக அவர் இறந்தது உறுதியானது.

உதவும் உள்ளம்:

அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அந்த குறுகிய நாட்களில் சக நோயாளிகளிடம் நற்பெயரைச் சம்பாதித்துள்ளார். மிகவும் அமைதியானவர், தான் ஒரு நோயாளி என்பதை மறந்து மற்ற நோயாளிகளுக்கு உணவு விநியோகப்பதில் தாதியர்களுக்கு அவர் உதவியுள்ளார். ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய அவர் மீது எந்தவிதப் புகாரும் இல்லை.

தன்னுடைய குடும்பம் அல்லாது, தன்னுடைய மனைவியின் குடும்பத்தையும் சேர்த்து கவனித்து வந்த இந்த நல்லுள்ளத்தின் மரணம் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு, கொரோனா மீதான அச்சம் ஒரு குடும்பதையே சிதைத்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரின் கிழக்கு பகுதியை மேலும் மெருகூட்டும் புதிய பசுமைப் பாதை திட்டம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…