“லீ குவான் யூ அவர்களின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த ஆண்டில்…..”- பிரதமர் லீ சியன் லூங் புத்தாண்டு வாழ்த்து!

Pmlee congrats govt officers
PHOTO: MCI

 

நாட்டு மக்களுக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், புத்தாண்டு தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

லாரி மற்றும் வேன் மோதி விபத்து: 21 வயதான ஆடவர் சம்பவ இடத்திலேயே மரணம்

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வெளியிட்டுள்ள 2024 புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், “2023 சவால்மிக்க ஓர் ஆண்டாக அமைந்தது. அனைத்துலகச் சூழலில் தொடர்ந்து பிரச்சினைகள் தோன்றின. சான் ஃபிரான்சிஸ்கோவில் சீன அதிபர் ஸி ஜின்பிங் உடனான அமெரிக்க அதிபர் பைடனின் அண்மைய சந்திப்பு அவ்விரு நாடுகளுக்கு இடையிலான உறவைச் சீர்படுத்தியுள்ள போதிலும், அடிப்படைப் பிரச்சினைகள் ஓய்ந்தபாடு இல்லை. உக்ரேனில், தீர்வுகள் ஏதும் புலனாகாத அளவுக்குப் போரும் பூசலும் தொடர்கின்றன.

ஆக அண்மையில், இஸ்ரேல் மீதான ஹமாஸின் கொடூரத் தாக்குதலும், அதைத் தொடர்ந்து காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட அதிரடி ராணுவத் தாக்குதலும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்களையும், வாழ்வாதாரத்தையும் சூறையாடியுள்ளன. அவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் பிள்ளைகளும் ஆவர். தொடரும் இந்தப் பயங்கரமான மனித அவலங்கள் குறித்து, உலகம் முழுவதும் வெறுப்பும் கோபமும் எழுந்துள்ளன.

சாதனைகள், சோதனைகள் பல நிகழ்ந்த ‘2023’ இன்றுடன் விடைபெறுகிறது!

சிங்கப்பூரில், அனைத்து இனத்தைச் சேர்ந்த மக்களும் தங்கள் ஆதங்கத்தையும், அக்கறையையும் வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, சிங்கப்பூர் முஸ்லிம்கள் தங்கள் எண்ணங்களை மிகவும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளனர். இது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றே.

மற்ற இடங்களில் எழும் பிரச்சினைகளிலிருந்து எவ்வளவுதான் நாம் விலகியிருக்க முயன்றாலும், அவ்வப்போது சிங்கப்பூரில் வாழும் நாம் பிறர் துயர் கண்டு வருந்துகிறோம். அது தவிர்க்க இயலாத ஒன்று. ஒன்றான மனிதத்தின் விளைவே அது. இம்முறையும் சிங்கப்பூரர்கள் இரக்க சிந்தனையுடன், நடைமுறைக்கு ஒத்த வகையில் தங்கள் எண்ணங்களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தியிருப்பது கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நமது கருத்துகளை வெளிப்படுத்தும் அதேவேளையில், நமது தேசிய நலனையும் சமுதாய ஒற்றுமையையும் நிலைநிறுத்தியுள்ளோம்; உதவி தேவைப்படுவோருக்கு குறிப்பாக, காஸாவில் வாழும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்க பெருந்தன்மையுடன் பங்காற்றியுள்ளோம்.

சிங்கப்பூருக்கு கனவுகளோடு வேலைக்கு வந்த வெளிநாட்டு ஊழியர்.. சடலமாக சென்ற பரிதாபம் – மரணம் குறித்து கேள்விகளை முன்வைக்கும் குடும்பத்தினர்

இந்த இக்கட்டான தருணத்தில் சமய, சமூகத் தலைவர்கள் அரசாங்கத்துக்குப் பக்கபலமாகத் துணைநின்று, நமது சமுதாய ஒற்றுமைக்குத் தேவையான ஆதரவையும் அறிவார்ந்த ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர். அதற்காக, நான் என்னுடைய நன்றியை உளமாறத் தெரிவித்துக்கொள்கிறேன். நமது இன, சமய நல்லிணக்கத்தைச், சிங்கப்பூர்ச் சமுதாயத்தின் அடிநாதமாக உருபெறச் செய்ய, நாம் பல்லாண்டுகாலம் அயராது பாடுபட்டுள்ளோம். இஸ்ரேல்- ஹமாஸ் பூசல் போன்ற பிளவுத்தன்மையுடைய பிரச்சினைகளை, நாம் தொடர்ந்து சகிப்புத்தன்மையுடனும் பரஸ்பர மரியாதையுடனும் கையாளவேண்டும்.

திரு லீ குவான் யூவும் அவருடைய சகாக்களும் கொண்டிருந்த விழுமியங்களையும் தொலைநோக்கு சிந்தையையும் பறைசாற்றுவதற்கு இதுவே சாலச் சிறந்த வழி ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றி பெறுவதற்கான முழு வாய்ப்பையும் பெறவல்ல நியாயமான, நேர்மையான சமுதாயம்; தகுதிக்கு முன்னுரிமை, கடின உழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இயக்கப்பெறும் துடிப்புமிக்க பொருளியல்; ஒவ்வொரு சிங்கப்பூரரும் ‘தமது’ எனப் போற்றத்தக்க அன்பானதோர் இல்லம்.

லீ குவான் யூ அவர்களின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த ஆண்டில், நாம் இந்த விழுமியங்கள் குறித்து எண்ணிப் பார்த்து, அவற்றுக்கான நமது கடப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளோம். அதிபர் தர்மன் சண்முகரத்னம் மாபெரும் வெற்றி பெற்ற அதிபர் தேர்தல், நாம் இனம், மொழி, மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட ஒரு தேசமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பதற்குச் சாலச் சிறந்த சான்றாகும்.

விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் புழு இருந்ததால் பரபரப்பு!

இந்த ஆண்டில், நாம் கொவிட்-19 நோயுடன் வாழவும் கற்றுக்கொண்டோம். கடந்த பிப்ரவரியில், நாம் நோய்ப்பரவல் செயல்பாட்டுக் கட்டமைப்பு நிலவரக் (DORSCON) குறியீட்டை அதிகாரபூர்வமாகப் பச்சை நிலைக்கு மாற்றி, கிருமிப்பரவலிலிருந்து மீண்டு வந்தோம். இதற்காக, நமது சுகாதாரப் பராமரிப்பு, முன்னிலை ஊழியர்கள் ஆகியோரின் அயரா முயற்சிகளுக்கும், சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளப் பாடுபட்ட அனைவருடைய ஒருமித்த பங்களிப்புகளுக்கும் நாம் நன்றி கூறவேண்டும். நமது சாலைகளும் அக்கம்பக்கப் பேட்டைகளும் மீண்டும் உயிரோட்டம் பெற்றுள்ளன; சுற்றுப்பயணிகளும் திரும்ப வருகின்றனர்; புதிதாகத் திறக்கப்பட்ட பறவைப் பூங்காவும் வருகையாளர்களைப் பெருமளவு ஈர்த்து வருகின்றது.

இவ்வாண்டு நாம் 1.2% வளர்ச்சி கண்டு பொருளியல் மந்தநிலையைத் தவிர்த்தோம். ஆனால், பணவீக்கம் படிப்படியாகக் குறைந்து வந்தாலும்கூட, அதிகரித்த வாழ்க்கைச் செலவினத்தின் நெருக்கடியைக் குடும்பங்கள் இன்னும் எதிர்கொள்கின்றன. அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் பலவும் குடும்பங்களின் மீதான சுமையைத் தணிக்க உதவியுள்ளன என்று நான் நம்புகிறேன். அடுத்த ஆண்டு, நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி 1 முதல் 3 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று வர்த்தகத் தொழில்துறை அமைச்சு முன்னுரைத்துள்ளது. பணவீக்கம் மேலும் குறையும் என்று நம்பலாம். ஆனால், இவை அனைத்தும் நம் அயலகச் சூழலையே பெருமளவு சார்ந்திருக்கும்.

இரண்டு பேருந்துகள் மோதி விபத்து: 4 பயணிகள் மருத்துவமனையில் அனுமதி – ஓட்டுநர் கைது

ஜனவரி 1 தொடக்கம், பொருள், சேவை வரி 9 விழுக்காடாக உயர்த்தப்படும். அதிலிருந்து பெறப்படும் கூடுதல் வருவாய்த் தொகை, நமது மக்கள்தொகை மூப்படைவதால் அதிகரிக்கவல்ல சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளை ஈடுசெய்ய உதவும். இந்தத் தாக்கத்தின் பாதிப்பைக் குறைக்க, குடும்பங்கள் அடுத்த ஆண்டும் தொடர்ந்து உத்தரவாதத் தொகுப்புத்திட்டத்தைத் பெறும். இவ்வகையில், உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு உதவி கிடைக்கும்; அதேவேளையில், நமது பொது நிதிகள் நீண்ட காலத்துக்குச் சீராகவும் நீடித்திருக்கவல்ல வகையிலும் பேணிக் காக்கப்படலாம்” எனத் தெரிவித்துள்ளார்.